சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயிரத்து 31 மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ஆளுநர்-வேந்தர் ஆர்.என். ரவி அவர்கள், 1,07,821 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பத்ம விபூஷண் விருது பெற்றவரும் ஹோமி பாபா தேசிய நிறுவன (HBNI) வேந்தரும் தலைமை விருந்தினருமான முனைவர் அனில் ககோட்கர் அவர்கள், தனது சிந்தனையைத் தூண்டும் உரையில், நிலையான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகள் மூலம் சமூகம் தொடர்புடைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் துடிப்பான புதுமை சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
அதிகரிக்கும் இந்திய மக்கள்தொகையின் முக்கியத்துவத்தையும், தேசத்தின் உருமாறும் வளர்ச்சிப் பயணத்தில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் நிகழும் முன்னேற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார் என தெரிவிக்கப்படுள்ளது.