தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுவிலிருந்து தன்னை நிரந்தரமாக நீக்கியதற்கு நடிகர் உதயா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல் விஜயின் சகோதரரும் நடிகருமான உதயா ஏற்கனவே தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் நீக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது நிரந்தரமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது பொது செயலாளர் விஷால் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று கூறினார். ஒரு பொது செயலாளர் இவ்வாறு பேசலாமா?
விஜய் காந்த் கடனை மீட்டு தான் நடிகர் சங்கத்தை நடத்தினார்.ஆனால் இவர்கள் கடன் வாங்கி கட்டடம் கட்டுகிறார்கள். நான் நடிகர் சங்கம் கடன் வாங்காமல் செயல்பட வேண்டும் என்று ட்வீட் போட்டதற்கு என்னை ஆறு மாதம் தற்காலிக நீக்கம் செய்தனர்.
இந்த தற்காலிக நீக்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தொடர்ந்து கொண்டே போனது. அதுமட்டுமில்லாமல் உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் எழுதிய இயக்குனர் பாக்யராஜையும் நீக்கம் செய்தனர்.
என்னுடைய ஆறுமாத தற்காலிக நீக்கம் முடிந்தது என்று எண்ணி தான் பொது குழு கூட்டத்திற்கு சென்றேன். அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனே போலிசார் அங்கு வந்தனர். அதனால் அங்கிருந்து சென்று விட்டேன்.
இந்நிலையில் இன்று எனக்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தில் என்னை நிரந்தர நீக்கம் செய்திருப்பதாக என போட்டிருந்தது. நான் என்னுடைய உறுப்பினர் உரிமைக்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். அதற்காக என்னை நிரந்தரமாக நீக்குவதா?
இவ்வளவு நாள் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லாம் என்னை நீக்காமல் இப்போது என்னை நீக்குவதற்கான காரணம். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற பயமா?
எனக்கு உறுப்பினர் உரிமை தேவை இல்லை. ஆனால் இவர்கள் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை நீக்கியதால் நான் வாங்கி கொடுத்த 3 கோடி பணத்தை திரும்ப தருவார்களா?
நான் கொரோனா காலத்தில் லாரன்ஸ் மாஸ்டரிடம் 25 லட்சம் பணம் வாங்கி நாடக நடிகர்களுக்கு வாங்கி உதவினேன்.
இயக்குனர் பாக்யராஜையும் நீக்கியது ஏற்று கொள்ள முடியாது. அவரை நீக்கியது மிகவும் வருத்தமாக உள்ளது.
நாங்கள் போன பொதுக்குழுவில் தகாத முறையில் நடந்து கொண்டோம் என்று சொல்லி நீக்கி இருக்கிறார்கள். என்னை மட்டுமில்லாது பாபி என்ற நடிகரையும் நிரந்தரமாக நீக்கம் செய்துள்ளனர்.
இவர்கள் செய்வதை பார்க்கும் போது சரத்குமார், ராதா ரவியே பரவாயில்லை என்று தோன்றுகிறது.தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல் தான் மூன்று வருடங்கள் நீட்டிப்பு செய்து இருக்கிறார்கள்.
தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பிகிறார்கள்.கண்டிப்பாக தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.
நடிகர் நாசர் தலைவராக உள்ளார் ஆனால் அவராலேயே பேச முடியவில்லை. சங்கமே செயல் படாமல் உள்ளது. இந்த மூன்று வருடங்களாக தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறார்களே தவிர சங்கமாக செயல் பட வில்லை.
தேர்தல் வேண்டும் என்று சொன்னால் சொல்கின்ற அனைவரையும் நீக்கம் செய்வீர்களா?
நான் என்னை நீக்கம் செய்ததற்கு விளக்கம் கேட்டேன்.அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர்.நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு என்ன தவறு செய்தேன்.
நான் தேர்தல் நடை பெறுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று இருந்தேன் ஆனால் என்னை நிரந்தரமாக நீக்கம் செய்ததால் தான் தற்போது செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.
நடிகர் தனுஷிற்கு உதவி செய்தல், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு கமிட்டி அமைத்தல் இது அனைத்தும் தேர்தல் நேரத்தில் செய்கிறார்கள்.
இறந்த நடிகர்களுக்கு ஈமச் சடங்கு செய்கிறது அனைத்தும் தனிப்பட்ட முறையில் தான் செய்கிறார்களே தவிர ஒரு சிலருக்கு மட்டுமே சங்கம் உதவி செய்கிறது.
நடிகர் விஷால் நல்லவர்கள் உள்ளே வந்து விட்டார்கள் கெட்டவர்கள் வெளியே சென்று விட்டார்கள் என்று கூறினார்.
இதில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? அதுமட்டுமில்லாமல் எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று கூறினார்கள்
தொடர்ந்து இது போல காழ்ப்புணர்ச்சியுடன் செயல் படுவதாலேயே நடிகர் சங்கம் செயல்படாமல் உள்ளது.
என்னை பொறுத்தவரை எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.