நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து 7 மணி நேரமாக உயிருக்கு போராடிய மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
குட்டலாடம்பட்டி பகுதியை சேர்ந்த 78 வயது மூதாட்டியான ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் கால் இடறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்த நிலையில் அருகில் இருந்த தடியை பிடித்துக்கொண்டு காப்பாற்றும் படி கூச்சலிட்டார்.
ஆனால் மூதாட்டியின் குரல் யாருக்கும் கேட்காததால் சுமார் 7 மணி நேரமாக கிணற்றுக்குள் ராஜம்மாள் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவ்வழியாக சென்ற சிலருக்கு மூதாட்டியின் குரல் கேட்கவே கிணற்றுக்குள் பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.