ஊழல் இல்லாத நாடு என கூறப்படும் சிங்கப்பூரில், அரை நூற்றாண்டில், முதல் முறையாக முன்ளால் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஊழல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுக்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சென்னையைப் பூர்வீகமாக கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த 62 வயது எஸ் ஈஸ்வரன், 1997ம் ஆண்டு முதன்முறையாக சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2006ம் ஆண்டு, பிரதமர் லீ சியென் லூங் லீயின் அமைச்சரவையில் இளைய அமைச்சராகச் சேர்ந்த அவர் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். 2021ம் ஆண்டு மே மாதம் போக்குவரத்து அமைச்சராக பதவி ஏற்றார்.
2008ம் ஆண்டு ஃபார்முலா ஒன் இரவு கார் பந்தயத்தை சிங்கப்பூருக்கு கொண்டு வந்த ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி ஈஸ்வரனை விசாரிக்க பிரதமர் லீ அனுமதி அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப் பட்ட ஈஸ்வரனுக்கு உடனே ஜாமீன் கிடைத்தது.
இந்த வழக்கு விசாரணை முடியும்வரை விடுப்பில் செல்லுமாறு ஈஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டது.
விடுப்புக்காலத்தில், ஈஸ்வரனின் சம்பளம் மாதத்துக்கு 8,500 சிங்கப்பூர் டாலர் ஆக குறைக்கப் படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்தார். இது சிங்கப்பூரில் அமைச்சரின் அடிப்படை சம்பளமான 46,750-சிங்கப்பூர் டாலரில் இருந்து 82 சதவீதம் ஆகும்.
ஈஸ்வரனிடம் நடத்திய ஊழல் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிலிருந்தும் ஈஸ்வரன் விலகினார்.
நீதிமன்றத்தில் தம் மீதான 27 குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் மறுத்தார் என்றாலும், கடந்த மார்ச் மாதம் அவர் மீது மேலும் 8 ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் சேர்க்கப்பட்டன.
1871ம் ஆண்டுக்கு சிங்கப்பூரின் முந்தைய சட்டத்தின் அடிப்படையில் ஈஸ்வரன் மீது 35 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மலேசிய கோடீஸ்வரர் ஓங் பெங் செங் மற்றும் லம் சாங் ஹோல்டிங்ஸின் இயக்குனர், டேவிட் லம் , ஆகிய இரண்டு தொழிலதிபர்களிடமிருந்து 400,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளனர்.
இந்நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
3, 80,000 சிங்கப்பூர் டாலர் தொகையையும் முறையற்ற வகையில் பெறப்பட்ட அன்பளிப்புகளையும் அரசிடம் ஈஸ்வரன் திருப்பிக் கொடுத்துவிட்டத்தாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் மீது திருத்தியமைக்கப்பட்ட 5 குற்றச்சாட்டுகளில், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஈஸ்வரனுக்கு ஆறிலிருந்து ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட நிலையில், ஈஸ்வரனுக்குச் சிறைத்தண்டனை விதித்துதான் ஆக வேண்டும் என்றால் அதிகபட்சம் 8 வாரம் வரை விதிக்கலாம் என்று ஈஸ்வரன் வழக்கறிஞர் தவிந்தர் சிங் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஈஸ்வரனின் ஊழல் வழக்கில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிபதி வின்சென்ட் ஹூங் தெரிவித்துள்ளார்
மத்திய கேபினட் அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரன் என்பதால் அவர் மீதான ஊழல் வழக்கு , ஆளும் PAP கட்சியின் செல்வாக்கை வெகுவாக குறைக்கும் என்றும் , இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
1986ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறகு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தண்டனை பெறும் முதல் சிங்கப்பூர் அமைச்சர் என்ற அவமானத்தை ஈஸ்வரன் பெறுகிறார்
உலகிலேயே அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமான சம்பளம் வழங்கும் நாடு சிங்கப்பூர் ஆகும்.
சிங்கப்பூர் அமைச்சரின் மாதச் சம்பளம் 55,000 டாலராகும். ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஊழல் புலனாய்வு தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர், உலகின் ஐந்தாவது-குறைந்த ஊழல் நாடாக இருக்கிறது.
இத்தனை நல்ல சம்பளம் கொடுத்து அமைச்சராக வைத்திருந்தும் ஊழல் வழக்கில் சிங்கப்பூரின் முன்னாள் போக்கு வரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் தண்டனைக்கு ஆளாகி இருப்பது சிங்கப்பூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.