குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
கச்சேரிநடை பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா தனது தந்தை தாசையன் அளித்த நிலத்தில் வீடு கட்டி தனது மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டுக்கு அருகில் மற்றொரு மாற்றுத்திறனாளியும் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில் இவர்களது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் கிறிஸ்டினா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கிறிஸ்டினாவின் வீட்டுக்குள் அடியாட்களுடன் நுழைந்த சத்தியராஜ், இரண்டு வீடுகளையும் இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளார். மேலும், கிறிஸ்டினாவையும் கடுமையாக தாக்கி உள்ளார். இதுகுறித்து கிறிஸ்டினா புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.