திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அளித்த யாதாத்ரி கோயிலின் செயல் அலுவலர் பாஸ்கர ராவ், கோயிலில் பயன்படுத்தப்படும் நெய் தொடர்பாக பக்தர்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நெய் தொடர்பான ஆய்வு முடிவுகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
யாதாத்ரி கோயிலில் நாள்தோறும் 600 கிலோ முதல் 700 கிலோ நெய் பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இதேபோல உத்தராகண்ட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தயார் செய்யப்படும் பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பிரசாதத்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.