நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுவரும் நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சத்திரம் பகுதியில் காவல்நிலையத்திற்கு சுமார் 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சட்டவிரோத மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. கூலித்தொழிலாளிகளை குறிவைத்து மது விற்பனை செய்யப்படும் நிலையில், பாருக்கு அதிக அளவில் வருகைதரும் கூலித்தொழிலாளிகள் அதிக விலை கொடுத்து மதுவை வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு குவாட்டர், இந்த பாரில் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காவல்நிலையத்திற்கு அருகிலேயே நடைபெறும் சட்டவிரோத மது விற்பனை குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.