லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சி மேயரின் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மேயர் பிரியாவுடன், அவரின் பெண் தபேதாரும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் அந்த பெண் தபேதாரான மாதவி, தன் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், அதனை தவிர்க்குமாறு மேயர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது எனவும், லிப்ஸ்டிக் போடக்கூடாது என அரசாங்க உத்தரவு எதுவும் இல்லை என பதிலளித்த மாதவியை மணலிக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் செய்தி மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து செல்லும் மாநகராட்சி அலுவலகத்தில் பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசுவது கவனத்தை திசைத்திருப்பும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதனை தவிர்க்க மட்டுமே அறிவுறுத்தியதாகவும் சென்னை மேயர் பிரியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியிட மாற்றத்திற்கும் லிப்ஸ்டிக் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.