நெல்லையில் பள்ளிக்கு அரிவாள் கொண்டு சென்ற மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவனின் புத்தகப்பையில் அரிவாள் இருப்பதாக உடற்கல்வி ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் புத்தகப்பையை சோதனை செய்தபோது அதில் அரிவாள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவனுக்கும் அவரது ஊரை சார்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும், இதனால் தற்காப்புக்காக மாணவன் அரிவாளுடன் வகுப்புக்கு வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்த ஆசிரியர்கள் மாணவனை பள்ளியில் இருந்து நீக்கம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்புடையமேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.