ஜன சங்கத் தலைவர் பண்டிட் தீன தயாள் உபாத்யாய பிறந்த நாளையொட்டி, அவருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பண்டிட் தீன தயாள் உபாத்யாயவின் சேவைகளை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில், ஏழைகளுக்கும் உதவும் தீன தயாள் உபாத்யாயவின் கருத்துருவாக்கம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே, டெல்லி பாஜக தலைமையகத்தில் உள்ள பண்டிட் தீன தயாள் உபாத்யாய உருவசிலைக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பண்டிட் தீன தயாள் உபாத்யாய, சிறந்த பொருளாதார வல்லுநராகவும், தத்துவ அறிஞராகவும் அறியப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், சுதேசி கொள்கையில் மிகவும் ஆழமான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்ததாகவும், அவரது பிறந்த தினத்தில் தேசத்திற்காக அவர் செய்த தியாகங்களை போற்றி வணங்கிடுவோம் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், தொலைநோக்குப் பார்வை கொண்ட பண்டிட் தீன தயாள் உபாத்யாய ஆழ்ந்த தத்துவஞானி என்றும், அவரது பாரம்பரியம் இன்றும் பாஜக சித்தாந்த வடிவில் உயிர்ப்புடன் இருப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் பண்டிட் தீன தயாள் உபாத்யாய பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தினர்.