பஞ்சாமிர்தம் குறித்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறாக பேசிய திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலையானார்.
தனது கைதை கண்டித்து கைதில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக சொல்லி, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பாமக வழக்கறிஞர் பாலுவும், மோகன் ஜியும் புகார் கொடுத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு,
தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொழுது காவல் துறையால் மோகன் கைது செய்யப்பட்டதாகவும், இப்பொழுது அவர் ஷார்ஸ் உடன் இருந்ததை கூட மாற்ற காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும், எதற்காக கைது செய்தோம் என்ன வழக்கில் கைது செய்தோம் எங்கே அழைத்துப் போகிறோம் என்பதை கூட காவல்துறை சொல்ல மறுத்ததாக குற்றம் சாட்டினார். மேலும் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட காவல்துறை அனுமதிக்கவில்லை என பாலு தெரிவித்தார். எனவே இதில், மனித உரிமை மீறல் மீறப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
பின்னர் பேசிய இயக்குநர் மோகன் ஜி,
ஆந்திராவில் முதலமைச்சரே லட்டு விஷயத்தில் அப்படி நடந்தது என்று சொல்லியதால் தான் நான் அப்படி பேசினேன். தமிழ்நாட்டிலேயும் அப்படி ஒரு பிரச்சனை செவிவழி செய்தியாக வந்ததால் இதைச் சொன்னேன், அப்படி இருக்கலாம் இருந்திருக்கலாம் என்று சொன்னேன்.
நான் பேசியது தவறான முறையில் சென்று சேர்ந்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால் அதிகமாக பேசக்கூடாது. நான் கைது செய்யப்பட்டபோது எனக்கு ஆதரவாக இருந்த எச். ராஜா, வானதி சீனிவாசன், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவருக்கும் சமூக வலைதளங்களில் ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றிஎன்றும், வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கல் தான் பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.