அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 -ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.