கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல்…நாமக்கல் அருகே சிக்கியது. என்ன நடந்தது?? விரிவாக பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் மின்னல் வேகத்தில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்தது அந்த கண்டெய்னர் லாரி. ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட அந்த கண்டெய்னர், சாலையில் சென்ற மற்ற வாகனங்ளை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதனை கண்ட பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடுவது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக லாரியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். லாரி செல்லும் வழிகளில் தடுப்புகளை அமைத்து அவர்கள் காத்திருந்தனர். ஆனால், தடுப்புகளை எல்லாம் மதிக்காமல் அந்த கண்டெய்னர் லாரி கடந்து சென்றது. மேலும், போலீசார் மீது மோதவும் முயன்றுள்ளது.
லாரியை பின்தொடர்ந்து சென்ற போலீசார், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது, கண்டெய்னர் லாரியில் உள்ளவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்ய முயன்றபோது, போலீசார் மீது கத்தியை கொண்டு அந்த வடமாநில நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து தற்காப்புக்காக தமிழக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு
காலில் படுகாயம் ஏற்பட்டது.
மறுபுறம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு to சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கண்டெய்னர் லாரியில் வந்தவர்கள் யார்? தடுப்புகளை மீறி அவர்கள தப்பிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
கண்டெய்னர் லாரியில் வந்த வடமாநில நபர்கள் அனைவரும், கேரளாவில் கடந்த 3 மாதங்களாக ஏடிஎம் கொள்யைில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடைசியாக திருச்சூரில் உள்ள ஏடிஎம்மில் கைவரிசை காட்டிவிட்டு, காரில் தப்பிச்செல்ல முயன்றபோது, அவர்களை கேரள தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த கொள்ளை கும்பல், ஊருக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கண்டெய்னர் லாரிக்குள் காரை செலுத்தி மறைத்துள்ளது. கொள்ளையர்களும் அந்த லாரியில் பதுங்கிக்கொண்டனர். லாரிக்குள் இருந்த காருக்குள் மொத்தம் 6 பேர் இருந்தனர். லாரியை ஒருவர் ஓட்ட, மற்றொருவர் கிளீனர் போல் நடித்துள்ளனர்.
அந்த கண்டெய்னர் லாரிதான், விஜயமங்கலத்தில் அதிவேகமாக பயணித்து சிக்கிக்கொண்டது. கண்டெய்னர் லாரியின் கதவை உடைத்து திறந்த போலீசார், உள்ளே இருந்த காரை பறிமுதல் செய்து, அதில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.
போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஹரியானாவை சேர்ந்த ஹசர் அலி என்பவருக்கு, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இரண்டு கால்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த சேலம் சரக டிஐஜி உமா, நடத்தப்பட்ட கண்கவுண்டரில் திட்டமிடல் எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார். கைது செய்யப்பட்ட வடஇந்திய கொள்ளையர்களிடம் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான், கைததான கொள்ளையர்கள் எங்கெங்கெல்லாம் கைவரிசை காட்டிள்ளார்கள் என்பது முழுமையாக தெரிய வரும்.