குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழக சுற்றுலா பயணிகள் 55 பேர் பாவ் நகர் தாலுகா நிஷ்கலாங்க மகாதேவ் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு மீண்டும் பாவ் நகருக்கு பேருந்தில் திரும்பியுள்ளனர்.
கோலியாக் அருகே சென்ற போது மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து சிக்கி கொண்டது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கடும் போராட்டத்துக்கு பின் ஜன்னல்கள் வழியாக 29 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு பாவ் நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் பாவ் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள 29 தமிழர்களும் வரும் 1ஆம் தேதி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் நிலையம் நிலையம் வருகிறார்கள்.