செமி கண்டக்டர்கள் உற்பத்தியைப் பெருக்கும் பிரதமர் மோடியின் இலட்சியத்துக்கு உதவும் வகையில், ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், பணியமர்த்தவும் டாடா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, சர்வதேச மின்னணு நிறுவனங்கள் மற்றும் சிப் உற்பத்தியாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருந்தது.
இனி வருங்காலத்தில், உலகம் பயன்படுத்தும் அனைத்து சிப்களும் இந்தியாவில் உற்பத்தியானதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அந்த வகையில், இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வளர்ந்த பொருளாதார நாடுகளுடனான தொழில்நுட்ப இடைவெளியைக் குறைப்பது செமி கண்டக்டர் திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக,15 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான செமிகண்டக்டர் முதலீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க மெமரி உற்பத்தியாளரான மைக்ரான் டெக்னாலஜி, 2.75 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் சிப் அசெம்பிளி உற்பத்திக்கு தொடங்கியிருக்கிறது. டவர் செமிகண்டக்டர் இஸ்ரேல் நிறுவனம், இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஃபேப்ரிகேஷன் ஆலை தொடங்க உள்ளது.
முன்னதாக, இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஃபேப்ரிகேஷன் வசதியை டாடா நிறுவனம் உருவாக்கி உள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ், குஜராத்தில், மொத்தம் 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் சிப் ஃபேப்ரிகேஷன் ஆலையை உருவாக்கி உள்ளது. இது மட்டுமில்லாமல், அசாமில், கிரீன்ஃபீல்ட் வசதியில், செமிகண்டக்டர் சிப்களை அசெம்ப்ளி செய்வதற்கும், சோதனை செய்வதற்கும் தனியாக 27,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்களுக்கு உபகரணங்களில் பயிற்சி அளிக்கவும், நவீன தொழிநுட்ப முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சிகளுக்கு உதவவும், ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஒரு வலுவான செமி கண்டக்டர் உற்பத்தி சூழல் அமைப்பை உருவாக்க இரு நிறுவனங்களும் தங்கள் வலிமையையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் 10,000 புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள,டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக சீனா உள்ளது. சீனாவில் உற்பத்தி செய்வதைக் குறைக்குமாறு ஜப்பானை அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் டோக்கியோ எலக்ட்ரான் இணைந்துள்ளது. இதனால் சீனாவுக்கான விற்பனை 30 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியோ எலெக்ட்ரானின் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவை, டாடாவுடனான கூட்டு ஒத்துழைப்பு கட்டுப்படுத்தி, அதிக லாபம் தரும் என்று டோக்கியோ எலக்ட்ரான் தலைமை நிர்வாக அதிகாரி தோஷிகி கவாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.