தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் விரிவுபடுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் மாநகராட்சியுடன் மேடவாக்கம், கோவிலம்பாக்கம், முடிச்சூர், பெரும்பாக்கம், திருச்சூலம் உள்ளிட்ட 18 கிராமங்கள் இணைக்கப்படும் எனவும் 84 புள்ளி 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்து 172 புள்ளி 34 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆவடி மாநகராட்சியில், திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் வானகரம், ஆயப்பாக்கம், நெமிலிசேரி, நசரேத் பேட் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுடன் ஒன்றிணைக்கப்படும் எனவும், இதன்மூலம் மாநகராட்சியின் பரப்பளவு 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
உள்கட்டமைப்பை மேம்படுத்த போதுமான நிதி மற்றும் மனித செயல்பாடு இருந்தால், இந்த விரிவாக்கம் வெற்றிகரமானதாக அமையும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம்பரத்தில் உள்ள 71 வார்டுகளில் 51 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.