ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அனைத்து தொகுதிகளையும் சேர்த்து ஆயிரத்து 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். ஹரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், வினேஷ் போகத் உள்ளிட்டோர் வாக்களித்தனர். வரும் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வாக்களிப்பதில் புதிய சாதனை படைக்க வேண்டும் என இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.