மதுரை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை, கே.கே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சில இடங்களில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வாகனங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை தீயணைப்புத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதேபோல் திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.