திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் பொன்னம்மாள் நகரில் உள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நாட்டு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவை திடீரென வெடித்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
அவரது உடல் பாகங்கள் 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன. விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் பெண் ஒருவரும், 9 மாத குழந்தை ஒன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.