சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த புதுவயல் பேரூராட்சியின் பாஜக கவுன்சிலரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
புதுவயல் பேரூராட்சியின் மாதந்திர கூட்டம் நடைபெற்றபோது பாஜக கவுன்சிலர் செல்வா என்பவர், மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது திமுகவை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவரான அலி என்பவருக்கும், செல்வாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த பேரூராட்சி துணைத் தலைவர் அலி மற்றும் செல்வாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த செல்வா மற்றும் பாஜக பிரமுகரான பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள், மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.