24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்… 14 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி… அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் வீரர் என 20 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருந்த ஈடு இணையற்ற நாயகனான ரபேல் நடால் தன் ஓய்வை அறிவித்திருக்கிறார். அவரின் சாதனைப் பயணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்..!
ஸ்பெயினின் மல்லோர்கா பகுதியில் 1986ம் ஆண்டில் பிறந்த நடாலுக்கு சிறுவயதில் கால்பந்து ஆட்டத்தின் மீதே அதிக ஈர்ப்பு இருந்தது. எனினும் அவரிடம் இயற்கையாகவே இருந்த டென்னிஸ் ஆடும் திறனை கண்ட உறவினர் டோனி நடாலின் முயற்சியால் டென்னிஸ் உலகத்திற்குள் அழைத்து வரப்பட்டார் ரபேல் நடால். பிரெஞ்சு ஓபனை ஒருமுறையாவது வெல்ல வேண்டும் என்ற ரபேல் நடாலின் கனவு 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அர்ஜெண்டினாவின் மரியனோ பியோர்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றபோது நடாலுக்கு வயது 19 மட்டுமே.
அதன் தொடர்ச்சியாக 2006, 2007 என அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று ஹாட்ரிக்கை பதிவு செய்த ரபேல் நடால், 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார்.
நடாலின் மிகப்பெரிய பலமே அவரது இடது கை ஆட்டம் தான். இயற்கையில் வலது கைப் பழக்கம் கொண்ட ரபேல் நடால் இடது கையில் டென்னிஸ் விளையாடுவது ஆச்சர்யம் என்றால் அவரது அசாத்தியமான ஆட்டம் அதிசயம்.
எப்படி ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு சென்று வின்னர் ஷாட் அடிக்கிறார் ? ஒவ்வொரு முறை காயத்திலிருந்தும் விரைவாக எப்படி மீண்டு வருகிறார் ? பல மணி நேரங்களையும் கடந்து அதே உத்வேகத்துடன் எப்படி நீடிக்கிறார் ? என ரபேல் நடாலின் விளையாட்டுத்திறனை கண்டு வியக்காதவர்களை கிடையாது.
20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் புல்தரை மைதானத்தில் சிறு சிறு தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும் களிமண் தரை மைதானத்தில் அவரை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்று சொல்லும் அளவிற்கு ஈடு இணையற்ற வீரராக வலம்வந்தார். டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவும், எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் வீழ்த்தவே முடியாத வீரராகவும் வலம் வந்த ரோஜர் பெடரரின் சாதனையையும் தகர்த்தார் ரபேல் நடால்.
விம்பிள்டன் போட்டிக்கு ரோஜர் பெடரர் என்றால் பிரெஞ்சு ஓபன் போட்டி நடால் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிரெஞ்சு ஓபன் போட்டியில் எவராலும் தகர்த்த முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ரபேல் நடால் வசம் ஏராளமான பட்டங்கள் உள்ளன.
களிமண் தரையில் நடால் ஆடிய போட்டிகளில் 99 சதவிகிதம் முடிவுகள் அவருக்கு சாதகமாகவே அமைந்திருக்கின்றன. அந்தளவிற்கு களிமண் தரையின் பாகுபலியாகவும், எவராலும் வீழ்த்தவே முடியாத அளவிற்கும் ரபேல் நடால் திகழ்ந்து வந்தார்.
காயமடைவது… ஓய்வெடுப்பது… கம்பேக் கொடுப்பது… கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவதையே ரிப்பீட் மோடில் செயல்படுத்திக் கொண்டிருந்தார் ரபேல் நடால். ஒவ்வொருமுறை காயத்திலிருந்து மீண்டு வரும் போதும் அது அவருக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் உத்வேகமாக இருந்தது.
இயற்கைக்கு மாறாக, காயங்களை கடந்து, ஜாம்பாவான் பெடரரை எதிர்கொண்டு, வயதை பொருட்படுத்தாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே இருந்த ரபேல் நடால் இன்றைய இளம் தலைமுறை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல இனி வரும் தலைமுறைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வார்.