டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா மறைந்த நிலையில், 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
டாடா அறக்கட்டளைகளின் கீழ் முதன்மை நிறுவனங்களாக சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை உள்ளன. இந்தியா முழுவதும், வெவ்வேறு துறைகளுக்காக 13 அறங்காவலர்கள் இந்த இரண்டு அறக்கட்டளைகளில் உள்ளனர். இந்த இரண்டு அறக்கட்டளைகளும் சேர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 52 சதவீத பங்குகளை வைத்துள்ளன.
கூடுதலாக, பொதுவான அறங்காவலர்களாக முன்னாள் ராணுவச் செயலாளர் விஜய் சிங், தொழில் அதிபர் வேணு சீனிவாசன், ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரான நோயல் டாடா, தொழிலதிபர் மெஹ்லி மிஸ்திரி மற்றும் வழக்கறிஞர் டேரியஸ் கம்பாடா ஆகியோர் உள்ளனர்.
இது தவிர சிட்டி வங்கியின் முன்னாள் இந்திய தலைவரான பிரமித் ஜாவேரி, ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் ஜெஹாங்கிர் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜஹாங்கிர் ஹெச் சி ஜஹாங்கீர் ஆகியோரும் இரண்டு அறக் கட்டளைகளில், அறங்காவலர்களாக உள்ளனர்.
அறங்காவலர்களிடையே பெரும்பான்மை ஒப்புதல் பெற்ற ஒருவரே டாடா அறக்கட்டளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அறக்கட்டளையில் துணைத் தலைவர்களாக உள்ள விஜய் சிங் மற்றும் வேணு சீனிவாசன் ஆகிய இருவரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.
டாடா குடும்பத்துடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும்,டாடா அல்லாத வேறு குடும்பப்பெயர்கள் இருந்தாலும் சரி, காலம் காலமாக பார்சிகள் மட்டுமே டாடா அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வந்துள்ளனர்.
ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். லியா,மாயா,நெவில் டாடா ஆகியோர்களே டாடா குழுமத்தின் சாத்தியமான வாரிசுகளாக கருதப் படுகிறார்கள். சில மாதங்களுக்கு முன், சர் டோராப்ஜி டாடா மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளைகளுக்கு இந்த மூவரையும் நியமிக்க ரத்தன் டாடா ஒப்புதல் அளித்திருந்தார்.
39 வயதான லியா டாடா ஸ்பெயினில் IE BUSINESS கல்லூரியில் படிப்பை முடித்தபின், டாடாவின் இந்திய ஹோட்டல் நிறுவனங்களின் குறிப்பிடத் தக்க பங்கைக் கொண்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் தாஜ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் & பேலஸ்ஸில் உதவி விற்பனை மேலாளராக சேர்ந்தார். இப்போது தி இந்தியன் ஹோட்டல்ஸ் காம்பாவில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
34 வயதான மாயா டாடா, டாடா குழுமத்தில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர். இவர்,டாடாவின் BAYES BUSINESS கல்லூரியிலும், இங்கிலாந்தில் WARWICK பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவர் டாடா குழுமத்தின் முதன்மை நிதிச் சேவை நிறுவனத்தில் ஆய்வாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், டாடா கேபிட்டல் நிதி மற்றும் டாடா டிஜிட்டல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். Tata NCU செயலியை அறிமுகப்படுத்தியது மாயாவின் வணிகத் திறமையை எடுத்துக்காட்டியது.
நெவில் டாடா, டாடாவின் சில்லறை வணிக சங்கிலியான ட்ரெண்ட் துறையில் உள்ள டாடா ஸ்டார் பஜாருக்கு தலைமை தாங்குகிறார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட ட்ரெண்ட் ஸ்டோர்கள் உள்ளன. இந்த ட்ரெண்ட் நிறுவனத்தின் தலைவராக 2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நோயல் டாடா இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் காலத்தில் தான், ட்ரெண்டின் வருவாய் 3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
டாடா குழுமத்தின் தரவரிசையில் உயர்ந்த பதவிகளில் இருக்கும், இந்த மூவரும், டாடா சாம்ராஜ்யத்தின் தலைவர் பதவி ஏற்க தயாராக உள்ளனர்.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா ,டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஒருவேளை டாடாவின் அடுத்த தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டால், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் 11வது தலைவராகவும், சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் ஆறாவது தலைவராகவும் இருப்பார்.