உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசுமுறை பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, வியன்டியனில் நடைபெற்ற 19வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிலிப்பைன்சில் யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆசியான் ஒற்றுமையை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக கூறினார்.
மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர் மோடி, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோன் உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனை அடுத்து, பிரதமர் மோடி, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை சந்தித்தார்.
முன்னதாக, கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.