ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தங்கியிருந்த ஒருவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.
ஈரோடு சக்தி சாலையில் வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இரண்டு பேர் தங்கி இருந்த அறையை ஊழியர் தூய்மைப்படுத்தியபோது தலையணை அடியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் தோட்டாக்களும் இருந்தன.
விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்படி நாட்டு துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்த போலீசார் விடுதியில் தங்கியிருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்திய போலீசார், டெல்லி சென்று ஹரீப்கான் என்பவரை பிடித்தனர்.
சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.