வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான அகிலாதேவி என்பவரின் கணவர் முத்தழகன், பெங்களூருவைச் சேர்ந்த ஜினித் என்பவருக்கு டாஸ்மாக் பார் நடத்த அனுமதி பெற்று தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜினித்துக்கு பார் நடத்த அனுமதி கிடைக்காததால் பணத்தை திருப்பி தருமாறு முத்தழகனிடம் கேட்டுள்ளார்.
அப்போது, கடை உரிமையாளர் முன் பணமாக வாங்கிய தொகையை 3 ஆண்டுகள் கழித்து திருப்பி தருவதாக கூறியதாக முத்தழகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜிடம் ஜினித் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை திருப்பித் தருமாறு முத்தழகன் வீட்டிற்கு சென்று ஜெயன் தங்கராஜ் தகராறில் ஈடுபட்டதுடன், தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரில் ஜெயன் தங்கராஜை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறிய போலீசார், அவரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.