ஒசூரில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தும், உரிய வரி செலுத்தாமலும் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 20 பேர் அடங்கிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரி செலுத்தாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தும் இயக்கப்பட்டு வந்த 18 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அந்த பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் இருந்து, வரிப் பணமாக 40 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.