அறநெறிகள் மற்றும் தேசியக் கொள்கைகளில் தலை நிமிர்ந்து நிற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், விஜயதசமி அன்று தொடங்கப்பட்டது. தீமையை அழித்த நன்மையின் வெற்றியைக் குறிக்கும் விஜய தசமி நாளில் தொடங்கிய ஆர்எஸ்எஸ், இன்று உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக வளர்ந்துள்ளது. நூற்றாண்டு காணும் ஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1925ம் ஆண்டு, ‘தசரா’ திருவிழாவின் 10ஆம் நாளான ‘விஜயதசமி’ நன்னாளில், நாக்பூரில், சுமார் 15 இளைஞர்களுடன் தனது 36 வயதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தை டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் உருவாக்கினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை கட்டமைப்பதிலேயே தன் முழு வாழ்வை அர்ப்பணித்தார்.
1940ம் ஆண்டு டாக்டர் ஹெட்கேவார் மறைந்த பிறகு, கோல்வால்கர் RSS அமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற்றுக் கொண்டார். அப்போதிலிருந்து, 1973ம் ஆண்டு மறையும் வரை, தன் அயராத தேசப் பணிகளால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பல்வேறு தடைகள், நெருக்கடிகளுக்கு இடையிலும், இந்திய மக்களின் இயக்கமாக வளர்த்தெடுத்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் டாக்டர்ஜி என்று ஹெட்கேவார் அழைக்கப்படுகிறார். குருஜி என்று கோல்வால்கர் போற்றப்படுகிறார்.
கோல்வால்கரின் தலைமையின் கீழ், அரசியலுக்கு ஜனசங்கம், மாணவர்களுக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், சாது சன்னியாசிகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத், தொழிலாளர்களுக்காக பாரதிய மஸ்தூர் சங்கம், விவசாயிகளுக்காக கிசான் சங்கம், அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், வனவாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி, போன்ற பல துறைகளிலும் சேவை புரியும் பல தன்னார்வ அமைப்புகளாக விரிவடைந்தது. மேலும், இந்த தன்னார்வ அமைப்புக்கள் அனைத்தும், இந்திய சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி இருந்தது.
1962ம் ஆண்டு நடந்த சீன-இந்தியப் போரின் போது ஆர்.எஸ்.எஸ். தேசத்துக்காக முன்னின்று சேவை செய்தது. குறிப்பாக, இராணுவ வீரர்களுக்கு தளவாடங்கள் கொண்டு சேர்க்கும் பணியை ஆர்.எஸ்.எஸ். செய்தது.
இதனைத் தொடர்ந்து, 1963ம் ஆண்டு நடந்த இந்திய குடியரசு தின அணிவகுப்பில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அழைப்பின் பேரில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பங்கேற்றது. இதன் மூலம், நாடெங்கும் RSS-ன் தேசபக்தி பாராட்டப்பட்டது. அதன் பிறகு, 1965 மற்றும் 1971 இந்திய-பாகிஸ்தான் போர்களிலும், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதில் RSS தொண்டர்கள் தன்னலம் கருதாது பணியாற்றினார்கள்.
தொடர்ந்து,பிரதமராக இருந்த இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியதை அடுத்து, தடை செய்யப்பட்ட நிலையிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திய ஜனநாயகத்தையும் , இந்திய அரசியல் அமைப்பையும் காப்பற்றுவதில் முக்கிய பங்காற்றியது.
நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டங்களை ஆர் எஸ் எஸ் நடத்தியது. ஆர் எஸ் எஸ் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட சுமார் ஒன்றரை லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சர்வதேச அளவில், மிகப் பெரிய தன்னார்வ அமைப்பாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொண்டர்கள், மக்கள் சேவையில் அயராது உழைத்து வருகிறார்கள்.
1934ம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் முகாமுக்கு வந்த மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பில், தீண்டாமை இல்லை என்றும், நல்லொழுக்கம் இருக்கிறது என்றும் பாராட்டி இருக்கிறார்.
1939 ஆண்டு, ஆர்எஸ்எஸ் முகாமுக்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், ஸ்வயம்சேவகர்கள் மற்றவர்களின் ஜாதியைக் கூட அறியாமல் முழுமையான சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் பழகுவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், டாக்டர் அம்பேத்கர், இந்திய கிராமப்புற மக்களுக்கும், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும் கல்வியை வழங்குவதில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
1949ம் ஆண்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன், “வன்முறை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு போன்ற ஆர்எஸ்எஸ் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவையாகும் என்றும் பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, அமைப்பு ஆகியவற்றின் பாடத்தை முஸ்லிம்கள் ஆர்எஸ்எஸ்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
1977ஆம் ஆண்டு, புகழ்பெற்ற காந்தியத் தலைவரும், சர்வோதய இயக்கத்தின் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆர்எஸ்எஸ் ஒரு புரட்சிகர அமைப்பு என்றும், நாட்டில் வேறு எந்த அமைப்பும் அதன் அருகில் கூட வரமுடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், சமுதாயத்தை மாற்றியமைக்கவும், சாதிவெறியை ஒழிக்கவும், ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவும் ஆர்எஸ்எஸ் ஸுக்கு மட்டுமே திறன் உள்ளது என்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் பாராட்டி இருக்கிறார்.
2006ம் ஆண்டு, கோல்வால்கரின் நூற்றாண்டு விழாவில் பேசிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்த போது, குவாலியர் ரயில் நிலையத்தில்,கோல்வால்கரை முதன் முதலாக தான் சந்தித்ததாகவும், அந்த நேரத்தில் தான் தேசத்திற்காக உழைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், 2008ம் ஆண்டில், தன்னை ஊக்கப்படுத்திய 16 தலைவர்களின் வாழ்க்கையைப் பிரதமர் மோடி ஒளியின் கதிர்கள் என்ற தலைப்பில் நூலாக எழுதியிருந்தார். அந்நூலில், பிரதமர் மோடி, கோல்வால்கரை மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் ஆகியோருடன் ஒப்பிட்டு மிக அதிகமான பக்கங்களில் பெருமையுடன் விவரித்திருந்தார்.
உலக நலனுக்கு பங்களிக்கும் வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ், மூன்று முறை தடை செய்யப்பட்ட போதும், ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றி ஆர்எஸ்எஸ் மீதான தடையை அரசே விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. 1992ம் ஆண்டு விதித்த தடையை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் மீதான தடையை விலக்கிக் கொண்டது.
குருஜி கோல்வால்கருக்குப் பிறகு, பாளாசாஹேப் தத்தாத்ராய தேவரஸ் தலைமையிலும், பிறகு, பேராசிரியர் ராஜேந்திர சிங் தலைமையிலும்,அவருக்குப் பின்,கே.எஸ்.சுதர்சன் தலைமையிலும், தற்போது டாக்டர் மோகன் பகவத் தலைமையிலும், புடம் போட்ட தங்கம்போல அதிக ஒளியுடனும், வலிமையுடனும் இந்திய மக்களின் பேராதரவுடன்தேசத்துக்குச் சேவை செய்து வரும் ஆர்எஸ்எஸ், இந்த விஜய தசமி நன்னாளில், நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது.