திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு-தர்பங்கா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான சில ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும் முன்வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல்களை அறிய அவசர உதவி எண்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கி சேதமடைந்த 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள், மின்சார வழித்தடம், ரயில்வே சிக்னல்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர், விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே மைசூர் – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் விபத்தில் சிக்கியதற்கான காரணம் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும் என, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில், தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வு குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எம்.சௌத்ரி, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனக் கூறினார்.