திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து தடம் புரண்டன. இதில் காயமடைந்த 7 பேர் பொன்னேரி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயமடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் ந்து விரைவு ரயிலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில்
தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி தண்டவாளம், சிக்னல், மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இரண்டு கிரேன்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் முதன்மை தண்டவாளம் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் மெதுவாக விபத்து நடந்த பகுதியை கடந்து சென்றது. மற்ற வழித்தடங்களிலும் லூப் லைனிலும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விரைவில் அனைத்து ரயில் சேவைகளும் சீராகும் என ரயில்வே துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.