சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சேலத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கிச்சிபாளையத்தில் உள்ள கருவாட்டு பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் , குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. இதேபோல், பச்சைப்பட்டி, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அத்துடன், பல பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.
கோவை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கியது. அப்போது, பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழைநீரில் சிக்கி மூழ்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு நீர் புகுந்ததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று, பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரெனால்ட்ஸ் ரோடு ஐயப்பன் கோயில் அருகேயும், பாதாள சாக்கடை பள்ளத்தில் மற்றொரு அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் பாதாள சாக்கடை பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஒரே நாளில் 2 பேருந்துகள் சிக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.