கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ என்றும், இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். சனிக்கிழமை இரவு முதல் பெய்த கோவை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
மதுரை மாநகரத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழை பெய்தால் விரைவாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்களும், மழை நீரைக் கடத்திச் செல்லும் பாசனக் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான் காரணம் ஆகும்.
மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த இராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் நேற்று ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர்.
மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள். இவை அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது தலைமைச் செயலாளர் என தமிழக அரசு நிர்வாகம் பல முறை பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் கலந்தாய்வுகளை நடத்தினார்கள்.
அவை அனைத்தும் பெயரளவிலான செயல்பாடுகளாகவே உள்ளன என்பதும், களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதும் சில மணி நேரம் பெய்த லேசான மழையிலேயே அம்பலமாகியுள்ளது. இது தான் வட கிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிர்கொள்ளும் அழகு என்றால் அடுத்து வரும் நாட்களை எண்ணி அஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.
வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன.
சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு வரை முடிக்கப்படவில்லை. மழை – வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள், நீர் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.,