அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இது மேற்கு, வடமேற்குதிசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து,
அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா, புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடதமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.