தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் நெசவாளர் குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர். என்.ரவி, நெசவாளர்களின் பிரச்சனைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் எனவும், நெசவாளர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என கூறினார். தொடர்ந்து பேசியவர், அடுத்த 2 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் எனவும், மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.