கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் 14 வழித்தடங்கள் உள்ளன. சுங்கச்சாவடியில் ஆந்திரா செல்ல ஏழு வழித்தடங்களும், தமிழகம் வருவதற்கு ஏழு வழி தடங்களும் உள்ள நிலையில், 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளது.
சுங்கச்சாவடியில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டடங்கள், தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளதால் மழை நீர் வெளியேற வழியில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் மாதவரம் – செங்குன்றம் சாலையில் கனமழை காரணமாக வெள்ள நீர் வழிந்து ஓடுவதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சாலையின் இருபுறமும் மழைநீர் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதே போல சென்னை OMR சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்களாக தேங்கி நின்ற மழை நீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேட்டுக்குப்பம் ராஜு நகர் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை, மூன்றாவது பிரதான சாலை என மூன்று சாலைகள் முழுவதும் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. 2 நாட்கள் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தண்ணீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.