பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 3 மாதங்களாக ஈடுபட்டு வந்ததாகவும், திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளில் இன்னும் 30 சதவீத பணிகள் எஞ்சியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘பருவமழை பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாநகரில் தேங்கும் மழைநீரை நீர் நிலைகளில் சேமிக்கும் விதமாக நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளிக்கரணையை அடுத்த நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், துரித நடவடிக்கைகளாலும் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 3 மாதங்களாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகளில் இன்னும் 30 சதவீத பணிகள் மீதமிருப்பதாகவும் குறிப்பிட்டார்.