தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் கொள்கைகளை பேராசிரியர் சம்பத் வாசித்தார்…. விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே த.வெ.க.வின் சமூக நீதி என்றும், பிற்போக்கு சிந்தனைகளை அகற்றுவதே த.வெ.க.வின் கொள்கை என்றும் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டங்களை தொண்டர் கேத்தரின் மாநாட்டு மேடையில் படித்தார்…. அதில் தலைமைச் செயலகத்தின் கிளை மதுரையில் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளியால் செய்யப்பட்ட வீரவாளை தலைவர் விஜய்க்கு நிர்வாகிகள் பரிசாக வழங்கினர். அப்போது அந்த வீரவாளை தலைக்கும் மேல் தூக்கி விஜய் சில விநாடிகள் போஸ் கொடுத்தார்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு எம்மதமும் சம்மதமே என்பதை உணர்த்தும் வகையில், தலைவர் விஜய்க்கு பகவத் கீதை, குரான், பைபிள் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவை வழங்கப்பட்டன.
பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கிய விஜய், தனது தாய் தந்தை இருந்த இடத்திற்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றார். அப்போது அவரது நீண்ட கால நண்பரான ஸ்ரீமான் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.