ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக நடைபெற்றது.
கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில், இன்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில், யாகசாலை பூஜைகளுடன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இசை வாத்தியங்களுக்கிடையே வேத மந்திரங்கள் முழங்க, கும்ப நீரால் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.