டெல்லியில் நடைபெற்ற வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வக்ஃபு வாரியத்தில் பெண்களும் இடம்பெறுவது, சொத்துகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட நோக்கில், சட்டத் திருத்தத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. இந்த மசோதா மீது நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லி வக்ஃபு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். பின்னர் அந்த அறிக்கை அனைவருக்கும் பகிரப்பட்டது.
டெல்லி முதலமைச்சர் அதிஷியின் ஒப்புதல் இன்றி, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஓவைசி, முகமது ஜாவீத், மொஹிபுல்லா நத்வி உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.