ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நாடெங்கும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்றால் என்ன ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவில் (PMJAY) ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, இந்தியக் குடிமக்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூக பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில், மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இதுவரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பயனடைந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், இதுவரை நான்கு கோடி ஏழை மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் தமிழகம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக, கடந்த ஜனவரி நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும், ஒன்றரை கோடி மக்களுக்கும் மேல் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். அதாவது, சுமார் 6,887 கோடி ரூபாய்க்கு மருத்துவ பயன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆயுர் வேத தினமான, தன்வந்திரி ஜெயந்தி நன்னாளில், நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்திய பிரதமர் மோடி, அதற்கான ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்த, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை வாயிலாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 கோடியே 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாழ்கிறார்கள்.
குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இந்த இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவையை பெறமுடியும். மூத்த குடிமக்கள், ஆதார் அட்டையில் பதிவுசெய்யப்பட்ட வயதின் அடிப்படையில், 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் ஒரே அளவுகோலாகும்.
இந்த திட்டத்தில் பதிவு செய்ய தேவைப்படும் ஆவணம் குறிப்பிட்ட நபரின் ஆதார் அட்டை மட்டுமே என்பது சிறப்பம்சமாகும். ஏற்கனவே ஆயுஷ்மான் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டையை செயல்படுத்த eKYC செய்ய வேண்டும். மேலும், புதிய அட்டையை செயல்படுத்துவதற்கும் eKYC அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, ஆதாரில் பிறந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட பிறந்த ஆண்டின் ஜனவரி 1 பிறந்த தேதியாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ காப்பீடு அல்லது மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு உள்ளவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விரிவு படுத்தப் பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், இரண்டு கோடி குடும்பங்களும், மூன்று கோடி தனி நபர்களும் கூடுதலாக பயன் அடைவார்கள். இதில், 58 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.