தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தால் 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.
சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் புதிய வகை சைபர் மோசடி நாடு முழுவதும் பரவியுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் பெரும் தொகையை இழந்துள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, மோசடி செய்பவர்கள் உங்கள் பெயரில் உள்ள பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகவும், அல்லது நீங்கள் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என தொலைபேசி அழைப்பு மூலம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டுவார்கள் என்றும், இதற்கு அஞ்சினால், தங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.
தொலைபேசியில் வீடியோ அழைப்பு விடுப்பவர்கள், போலீஸ் அதிகாரிகளோ, சிபிஐ மற்றும் சுங்க அதிகாரிகளோ இல்லை என்றும், அவர்கள் சைபர் கிரிமினல்கள் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தால், 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது.