தெலங்கானாவில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேராததால் பணி இழந்த பேராசிரியர்கள், டெலிவரி ஊழியர்களாகவும் பைக் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் வேலை செய்கின்றனர். இந்த வேலை இழப்பு நிகழ்ந்தது எப்படி? தெலுங்கானா தொழில்நுட்பக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? என்பது பற்றி பார்ப்போம்.
தெலங்கானா மாநிலத்தில், சுமார் 175 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 86,943 பொறியியல் இடங்கள் இந்த கல்லூரிகளில் உள்ளன. முக்கியமாக கணினி அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் மட்டும் 61,587 இடங்கள் உள்ளன. சிவில் மற்றும் மெக்கானிக்கல் போன்ற பாரம்பரிய பொறியியல் பிரிவில் மொத்தம் 7,458 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறைகளில் வெறும் 4,751 இடங்களே உள்ளன.
மேலும், இந்த துறைகளில், சுமார் 25 சதவீத இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமல் வீணாகிறது. நாட்டில் அதிகமான பொறியியல் வல்லுனர்களின் தேவை இருக்கும் நிலையில், இந்த புள்ளிவிவரம் அதிர்ச்சியைத் தருகிறது.
பாரம்பரிய பொறியியல் துறைகளான சிவில்,மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. AI, DATA சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற நவீன அறிவியல் துறைகள் வேகமாக வளர்ந்து வருகிறது.
அதனால், தெலங்கானாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளும், இந்த பாரம்பரிய பொறியியல் துறைகளை விட AI, DATA சயின்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்றன.
2020ஆம் ஆண்டிலிருந்தே, பாரம்பரிய பொறியியல் துறைகளில் அதிக பட்சமாக 70 சதவீதம் வரை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அந்தந்த துறைகளில் பணியிலிருந்த மூத்த பொறியியல் பேராசிரியர்களுக்கு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை சம்பளம் குறைக்கப் பட்டது. பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பணி இழந்த பல பேராசிரியர்களுக்கு வேறு கல்லூரிகளிலும் வேலை கிடைக்கவில்லை. எனவே, டெலிவரி பாய் ஆக , பைக் ஓட்டுநராக தெருவோர கடைகளில் ஊழியராக, பணியாற்றி வருகின்றனர்.
டெலிவரி பாய் ஆக வேலை பார்க்கும் முன்னாள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர், ஒரு நாளைக்கு சுமார் 600 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பல அனுபவமிக்க பேராசிரியர்களைக் கல்வி நிறுவனங்களோ அல்லது தொழில் நிறுவனங்களோ பணியமர்த்த முன்வராததால் பலர் வேலை கிடைக்காமல் கஷ்டப் படுவதாக, தெலுங்கானா தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஸ்ரீனிவாஸ் வர்மா கூறியுள்ளார்.
அடுத்த கல்வியாண்டு முதல், தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அல்லது இடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள தொழில்நுட்பக் கல்வித் துறையின் அதிகாரிகள், ஒரு படிப்பில் அதிகபட்சமாக 120 இடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படும் என்று தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், முக்கிய பொறியியல் பாடங்களைப் பயிற்றுவிக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பேராசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.