ஜார்க்கண்ட் மாநில பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 100 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.
அதில், பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 100 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுவதுடன், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தீபாவளி மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளின்போது ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும், அடுத்த ஐந்தாண்டுகளில் இளைஞர்களுக்கு 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் உள்ள 2.87 லட்சம் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.