கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த இந்திய தூதரக முகாமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட ஆண்டுகளாகவே , கனடாவில் உள்ள இந்துக்கள் மீதும் ,இந்து கோயில்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
கனடாவின் மிசிசவுகா நகரில் உள்ள ராமர் கோவிலில் தாக்குதல் நடந்தது. கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்துக் கோயிலைத் தாக்கியதோடு, அதன் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டன.
கனடாவின் எட்மன்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலும் தாக்கப்பட்டது. இப்படி, கனடாவில் வாழும் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயிலில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பக்தர்களைக் காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டுள்ளனர்.
1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து இந்து சபை கோவில் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள், திடீரென இந்துக் கோயிலில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் பலர் காலிஸ்தான் ஆதரவு கொடிகளை ஏந்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா இந்து அறக்கட்டளை, இந்த தாக்குதல் சம்பவ வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அந் வீடியோவில், காலிஸ்தான் ஆதரவு கொடிகள் ஏந்திய காலிஸ்தான் சீக்கியர்கள் தடிகளைக் கொண்டு இந்து பக்தர்களைத் தாக்குகின்றனர்.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களும் தாக்கப்பட்டதாக கூறியுள்ள கனடா இந்து அறக்கட்டளை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் காலிஸ்தான் ஆதரவு அரசியல்வாதிகளின் துணையோடு நடக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்து சபை கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்துகளைப் பாதுகாத்த காவல்துறையை பாராட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்து சபா கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி (Pierre Poilievre), இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டதாக கூறியுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா, கனடாவில், இந்துக்கள் மீதான காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறை எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் கருத்து சுதந்திரத்தின் பெயரில் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்துக்களைத் தாக்க இலவச அனுமதி பெறுவதாக குற்றம் சாட்டியுள்ள சந்திரா ஆர்யா, நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறி உள்ளார்.
கனடாவில் இந்துக்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், கனடாவில் வாழும் இந்துகளுக்கு, கனடா அரசு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
மேலும், இந்திய தூதரக முகாமையும், இந்து கோவிலையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இந்தியா விரோத சக்திகளால் திட்டமிடப்பட்ட வன்முறை என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.