பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி அந்நாட்டில் இன்று மாலை 5 மணியளவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவரில் யார் வெற்றி பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் சில கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகவும், சில கருத்து கணிப்புகள் டொனால்டு ட்ரம்புக்கும் ஆதரவாகவும் உள்ளன.
வாக்குப்பதிவு நிறைவடைந்த அன்றிரவே 50 மாகாணங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு புதிய அதிபர் யார் என்பது தெரியவரும். கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்தது.
இதனால் சில நாட்களுக்குப் பிறகே ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. தற்போதைய தேர்தலில் கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால் இந்த முறையும் அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.