பொதுநலன் என்ற பெயரில் தனிநபர் சொத்துகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பை அளித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் 9 பேர் கொண்ட அமர்வு இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.
அப்போது 8 நீதிபதிகள் பெரும்பான்மை அடிப்படையில் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொதுநலன் என்ற பெயரில் தனிநபருக்குச் சொந்தமான அனைத்து நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டனர்.
ஏற்கெனவே கடந்த 1977-ஆம் ஆண்டில் நீதிபதி கிருஷ்ண ஐயர் வெளியிட்ட தீர்ப்பில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 39பி-இன்கீழ், தனிநபர் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு உரிமை இருப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.