முதலமைச்சரும், அமைச்சர்களும், கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரும், அமைச்சர்களும், கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியில் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள ஹெச்.ராஜா, அரசு அதிகாரிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியவில்லை என்பதால் புறக்கணிக்கப்பட்டதா என அர்த்தம் கொள்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சரும் அவர் தலைமையிலான திமுகவும் திராவிட சிந்தனையில் இருப்பதால் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசியகீதத்தையும் புறக்கணிக்கிறதா? என்று தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்கள் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.