திமுக அரசு மீண்டும் மீண்டும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை கண்மூடித்தனமாக காப்பியடித்து வருகிறது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
கடந்த 4-ம் தேதி சென்னை கொளத்தூரில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் பகிர்வு பணியிட மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறித்து தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக, பிரதமர் மோடியின் ரசிகரைப் போல அவரது மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காப்பியடிப்பதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் இந்தியளவில் 124 பகிர்வு பணியிட மையங்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 18 பகிர்வு பணியிட மையங்களும் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
இதனைக் கண்டு சென்னை கொளத்தூரிலும் பகிர்வு பணியிட மையத்தை உருவாக்கி, தாங்கள் பிரதமர் மோடியின் அதிதீவிர ரசிகர் பட்டாளம் என்பதை திமுக மீண்டும் பதிவு செய்துள்ளதாகவும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கும் சேர்த்தே திமுகவினர் தங்களது ஸ்டிக்கர் ஒட்டுவதை மட்டும் தவிர்த்துவிடுவது நன்று எனவும் தமிழக பாஜக அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பிரதமரின் திட்டங்களைத் தவறாமல் பின்தொடரும் திமுகவினரின் அளப்பரிய அன்பைக் கண்டு தேசிய பாஜக அகம் மகிழ்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.