பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா உடல்நலக்குறைவால் காலமானார்.
பீகாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், போஜ்புரி மொழியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு சாரதா சின்ஹாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சாரதா சின்ஹாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக பாட்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர் சாரதா சின்ஹா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகர் சாரதா சின்ஹா ஜியின் மறைவுஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மைதிலி மற்றும் போஜ்புரி நாட்டுப்புற பாடல்கள் கடந்த பல தசாப்தங்களாக மிகவும் பிரபலமாக உள்ளன.
நம்பிக்கையின் பெரிய திருவிழாவான சாத் உடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.