இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக வக்பு வாரியங்கள் என்ன செய்துள்ளன என, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் ஆவேசமுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது தொடர்பாக இஸ்லாமிய பெண்கள், பெண் சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, இஸ்லாமிய சமூகத்தை முன்னேற்றுவதாகவும், அச்சமூக நலனில் அக்கறை இருப்பதாகவும் வக்பு வாரிய நிர்வாகிகள் கூறிவருவதை தாங்கள் ஏற்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்றோர் என பலரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்ட அவர்கள்,அத்தகையவர்களின் நலனுக்காக வக்பு வாரியங்கள் என்ன நன்மைகள் செய்துள்ளன என கேள்வி எழுப்பினர்.
வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கும் கும்பல்களாக அதன் பல நிர்வாகிகள் உள்ளதாகவும், இதுவரை இருந்த அரசுகள் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இஸ்லாமிய பெண்கள் குற்றம் சாட்டினர்.
இஸ்லாமிய சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த மக்களை மேம்படுத்துவதே வக்பு வாரியத்தின் நோக்கம் என கூறப்பட்டாலும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுவதாக இஸ்லாமிய பெண்கள் வேதனை தெரிவித்தனர்.
மத்திய அரசு வக்பு வாரியங்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தர முயற்சி மேற்கொள்வதை பாராட்டுதாக கூறியுள்ள இஸ்லாமிய பெண்கள், வக்பு வாரிய திருத்த மசோதாவை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.