திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன.
கடந்தாண்டு இறுதியில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் முற்றிலும் உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்தது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் அவற்றை ஒப்படைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
இதில், RSS சேவா துறையின் தேசிய இணை செயலாளர் A.செந்தில்குமார், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல் இயக்குநர் சீனிவாசன், ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, காலநிலை மாற்றத்தால்தான் கடந்தாண்டு வரலாறு காணாத மழை பெய்ததாக தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல், சுற்றுசூழல் பாதுகாப்பும் மிகவும் அவசியம் என அவர் கூறினார். வசதி படைத்தவர்கள் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வீடுகளை பெற்ற மக்கள், தென்தமிழ்நாடு சேவா பாரதி அமைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.